வீடியோ பகிர்வு வலைத்தளமான யூடியூப் மீதான தடையை நீக்கி, பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) தீர்மானம் கொண்டுவந்தது.
யூடியூப் வலைத்தளம் மீதான தடையை நீக்கக் கோரி, பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த ஷாஸ்யா மர்ரி அளித்த தீர்மானத்தை, அந்நாட்டு நாடாளுமன்றம் ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
இதுகுறித்து ஷாஸ்யா மர்ரி கூறுகையில், "யூடியூப் வலைத்தளத்தில் இருந்த ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் நீக்கப்பட்டன. ஆதனால், இந்த வலைத்தளத்தின் மீதான தடை விலக்கிக்கொள்ளப்பட்டது" என்று தெரிவித்தார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு வெளிவந்த 'இன்னோசன்ஸ் ஆஃப் முஸ்லீம்ஸ்' என்ற திரைப்படத்தின் ட்ரெய்லரை நீக்க மறுத்ததால், பாகிஸ்தான் தொலைத்தொடர்பு துறை யூடியூப் வலைத்தளத்தை தடைசெய்தது. இத்திரைப்படத்திற்கு எதிராக பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
முன்னதாக, இதே போன்ற காரணங்களுக்காக யூடியூப் தளத்தை இரண்டு முறை தடை செய்தது பாகிஸ்தான் அரசு.
அதேவேளையில் துருக்கி, ஈரான், சுடான் முதலான இஸ்லாமிய நாடுகளில் யூடியூப் தளம் மீது தடை நீடிப்பது குறிப்பிடத்தக்கது.